search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாகிஸ்தான் அகதிகள்"

    இலங்கையில் குண்டு வெடிப்பில் இறந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினர், பாகிஸ்தான் அகதிகள் மீது தாக்குதலில் ஈடுபட்டனர். #srilankablasts #Pakistanrefugees

    கொழும்பு:

    இலங்கையில் குண்டு வெடிப்பில் இறந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினர், பயங்கரவாதிகள் மீது கடும் கோபத்தில் உள்ளனர். அவர்கள் முஸ்லிம்களை தாக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.

    இலங்கையில் நிகொம்பாவில் செயின்ட் செபாஸ்டின் தேவாலயம் உள்ளது. இங்கும் குண்டு வெடிப்பு நடந்தது. அதில் 100-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். அவர்களுடைய உடல் அடக்கம் ஒரே இடத்தில் நடந்தது.


    நிகொம்பாவின் புறநகர் பகுதியில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து வந்த அகதிகள் 400 குடும்பத்தினர் தங்கி உள்ளனர். இவர்கள் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் பல நாடுகளில் அகதிகளாக அடைக்கலம் புகுவதற்கு விண்ணப்பித்து விட்டு காத்திருக்கிறார்கள். அவர்கள் அங்குள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

    இந்த நிலையில் நிகொம்பாவில் இறந்தவர்கள் அடக்கம் முடிந்ததும் 100-க்கும் மேற்பட்டோர் கையில் பயங்கர ஆயுதங்களுடன் பாகிஸ்தானியர்கள் தங்கி இருந்த பகுதிக்கு வந்தனர்.

    இதனால் பயந்துபோன அவர்கள் வீட்டை பூட்டிக் கொண்டு உள்ளே இருந்தனர். அப்போது ஜன்னல் கதவுகளை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த ஆண்களை இழுத்து வந்து தாக்கினார்கள். அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அதையும் மீறி இந்த தாக்குதல் நடந்தது.

    இதற்கு தாக்குபிடிக்க முடியாமல் அங்கிருந்து தப்பி நிகொம்பா போலீஸ் நிலையத்திற்கு ஓடினார்கள். போலீஸ் நிலையத்திற்குள் புகுந்தும் அவர்கள் மீது தாக்குதல் நடந்தது. அதன் பிறகு கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டனர். இதனால் அமைதி திரும்பியது.

    ஆனாலும் உயிருக்கு பயந்து 60-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள், குழந்தைகள் நிகொம்பா போலீஸ் நிலையத்திலேயே தஞ்சம் அடைந்துள்ளனர்.

    பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அகதிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும், இது சம்பந்தமாக மனித உரிமை கமி‌ஷன் உரிய நடவடிக்கை எடுத்து அவர்களுக்கு மறுவாழ்வுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று முஸ்லிம் இளைஞர் அமைப்பின் தலைவர் நவாஸ்தீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இதேபோல முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகளில் தாக்குதல் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதால் முஸ்லிம்கள் வெளியே வர பயந்து வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார்கள். அங்கு தாக்குதல் நடக்காமல் இருக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. #srilankablasts #Pakistanrefugees

    ×